

பாம்பு கொத்திய நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் புகழ்பெற்ற பாம்பு மீட்பரான வாவா சுரேஷ், கடந்த ஜன.31 அன்று மாலை கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள குரிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்த ஒரு நல்ல பாம்பை மீட்கச் சென்றார். சில நிமிடங்களில் பாம்பைப் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் அதை பையில் போட முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக சுரேஷின் தொடைப் பகுதியில் பாம்பு கொத்தியது.
இதனால், உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கோட்டயம் காந்தி நகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் கூறுகையில், ‘வாவா சுரேஷ் வென்டிலேட்டர் உதவி இல்லாமலே சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. செவிலியர்களுடன் பேசுகிறார். மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார். அடுத்த 24-48 மணி நேரத்திற்கு அவர் ஐசியூவில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
