நற்றிணைப் பாடல் 121:
விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை
அரலை அம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே
2
எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு
பரியல் வாழ்க நின் கண்ணி காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே
பாடியவர்: சிறைப்பெரியனார்
திணை: முல்லை
பொருள்:
வரகுப் பயிரை மேய்ந்த பெண்மான் மேட்டு நிலத்தில் தன் ஆண்மானோடு வாழும் முல்லை நிலத்து ஊரில் நீ விரும்பியவள் இருக்கிறாள்.
வரகு முதையல் நிலத்தில் விளைந்திருக்கிறது. வரகு இரட்டை இலைகளுக்கு இடையை கதிர் வாங்கி விளைந்திருக்கிறது. முதையல் என்பது காட்டு மரங்களை வெட்டி எரித்து உருவாக்கிய பழமையான நிலம். விதைப்பவர்கள் வெட்டி உருவாக்கிய முதையல் நிலம். முறைப்படி விதைக்கப்பட்ட முதையல். வேந்தே, இருட்டிவிட்டது என்று சொல்லி வருத்தப்பட வேண்டாம். நீ சூடிய தலைமாலை வாழ்வதாகுக. குதிரையில் எறிப் புறப்படு. குளுமையான மழை பொழிந்து வெள்ளம் காட்டாற்றுக் கரையை உடைத்துக்கொண்டிருக்கிறது. அதனைத் தாண்டிச் செல். உன் மனைவி இரவு விருந்தைப் படைப்பாள். மென்மையானதும், மூங்கில் போன்றதுமான அவளது தோளில் உறங்க விரும்புபவன் நீ அல்லவா?