நற்றிணைப் பாடல் 122:
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள் இருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்
பூ வேய் கண்ணி அது பொருந்துமாறே
பாடியவர்: செங்கண்ணனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படித் தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
பாறைகள் அடுக்கிக்கிடக்கும் நிலத்தை அண்ணன்மாரும் தந்தையும் (ஐயர்) உழுதனர். தினை விதைத்தனர். தினைப்புனம் காக்க மகளை அனுப்ப வேண்டி வரும் என்று தாய் நினைக்கிறாள். இப்போது ஊரில் உள்ள மென்மையான நிலப்பகுதியில் மௌவல் பூத்துக் கிடக்கிறது. வெண் மேகங்கள் (நரை உரும்) நள்ளிருளில் இடிக்கின்றன. அவன் (வரையக நாடன்) இவளைத் தேடி வருவானோ மாட்டானோ என்று புத்தியைத் தீட்டிக்கொண்டு (மதிவல் உள்ளமொடு) உன் வருகையில் விருப்பம் இல்லாதவளாக, என்ன செய்யலாம் என்று எண்ணிக்கொண்டு தாய் காத்துக்கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் என்ன செய்யவேண்டும் என்று நீயே தீர்மானித்துக்கொள். உன் முடிவு பூப் போன்ற கண்ணை உடைய இவளுக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.