• Thu. Apr 25th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 23, 2023

நற்றிணைப் பாடல் 120:

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நப் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே

பாடியவர்: மாங்குடி கிழார் பாடல்
திணை: மருதம்

பொருள்:

 அந்த இல்லம் அகன்ற கொம்புகளைக் கொண்ட எருமையின் கன்றுகள் தூண்களில் கட்டப்பட்டிருக்கும் நல்ல இல்லம்.
அவள் காதிலே குழை வளையம் அணிந்திருக்கிறாள். செழுமையானவள். செம்மையானவள். அறியாப் பேதை. மெல்லிய விரலில் சிறிய மோதிரம் (தாழ்) போட்டிருக்கிறாள். தன் விரல் சிவக்கும்படி வாளை மீனை வகையாகச் சுட்டாள். புகை கண்ணில் பட்டது. என்றாலும் அவளுக்கு விரும்பிய கண்கள் (அமர்த்த கண்ணன்). பிறை போன்ற நெற்றியில் வியர்வை. தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். இப்படிச் சமைத்து வைத்திருக்கும் அட்டிலோள் என்னோடு பிணக்குப் போட்டுக்கொண்டாள். அவள் அம் மா அரிவை (அழகிய மாமை நிறம் கொண்டவள், அரிவைப் பருவத்தவள்)
என் வீட்டுக்கு விருந்து வரவேண்டும். சினம் மாறிவிடும். (சிவப்பாள் அன்று). அவளது சிறிய முள் போன்ற பற்கள் தெரியும். புன்னகை பூத்த முகம் வந்துவிடும். அதனை நான் காணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *