நற்றிணைப் பாடல் 119:
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர் கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவியடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே
பாடியவர்: பெருங்குன்றூர்கிழார்
திணை: குறிஞ்சி
பொருள்:
களவு கற்பாக மாறத் தோழி தலைவிக்குச் சொல்லித்தரும் தந்திரம் இது.
கேழல் பன்றிகள் (காட்டுப்பன்றி) விளைந்திருக்கும் தினையை உண்ண வரும். அது மாட்டிக்கொள்வதற்காகப் புனவன் (தினைப்புனக் காவலாளி) பெரிய கல்லைத் தூக்கி நிறுத்திப் பொறி அமைத்திருப்பான். அந்தப் பொறியில் வலிமை மிக்க புலி விழுந்து அடிபட்டுச் சாவது உண்டு. இத்தகைய நாட்டை உடையவன் நாடன் (தலைவன்). அவன் தன் காம உணவுக்காக வந்திருக்கிறான். பல்வகை மலர்கள் பூத்துக் குலுங்கும் ஆற்றுப் படுகைச் சோலையில் இனிய முகம் கொண்ட பெரிய ஆண் முசுக் குரங்கு மேய்ந்து பசியாரும். வருடை ஆட்டு மந்தை துள்ளி விளையாடும். அந்த மலையில் உள்ள நிழல் வழியாக அவன் வருகிறான். குளவி, கூதளம் பூக்களைச் சேர்த்துக் கட்டிய மாலை அணிந்துகொண்டு வருகிறான். அவனைத் தழுவாதே. பிணக்குப் போட்டுக்கொள். அவன் மலையைக் காட்டிலும் பெரிய பிணக்காகப் போட்டுக்கொள். இப்படித் தோழி தலைவிக்கு அவனை மணந்துகொள்ளத் தந்திரம் சொல்லித்தருகிறாள்.