நற்றிணைப்பாடல்:394
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப, பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், வன் பரல் முரம்பின், நேமி அதிர சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே; இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின் குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? பாடியவர்:அவ்வையார் திணை : முல்லை
பொருளுரை:
மரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடமகன்ற காட்டின்கண்ணே வாடிய ஞெமையின் மீதிருந்த பேராந்தை; பொற் கொல்லன் தொழில் செய்வதினெழுகின்ற ஒலிபோல இனியவாய் ஒலியாநிற்ப; பூட்டிய மணிகளொலிக்கும் அருங்கலம் விளங்கிய தேரினுருள்; சுரத்தினுள்ள மேட்டு நிலத்தின்கண் அதிர்ந்து செல்லாநிற்ப; முன்பு இத் தோன்றல் முன்பனி நாளிலே சென்றனன்; இப்பொழுது சுரத்திடையே மேகம் எழுந்து உலாயதெனக் கொண்டு கார்ப்பருவம் வந்திறுத்ததென; தன் காதலியை ஆற்றுமாறு மீள்வானாகித் தன் மார்பிற் குறிய புள்ளிகளமைந்த பூசிய சாந்தத்தினுங் காட்டில் நறிய குளிர்ச்சியுடையனாய் வாரா நின்றான்கண்டீர்! இவன் வாழ்வானாக! யான் இதற்கு நோவேனோ? நோவேனல்லேன்! மகிழ்வேன் மன்.