• Sun. Apr 28th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 28, 2024

நற்றிணைப்பாடல் 328:

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து,
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,
அது இனி வாழி – தோழி! – ஒரு நாள் சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,
பெரும் பெயல் தலைக, புனனே! – இனியே,
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,
விலங்கு மலை அடுக்கத்தானும் கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.

பாடியவர் : தொல் கபிலர் திணை: குறிஞ்சி

பொருள்:

தோழீ! கிழங்குகள் கீழிறங்கித் தேனடைகள் மிகுதியாக மேலே வைக்கப்பட்டு; மிகச் சிலவாய தினைகளை விதைத்து அவை மிகப் பலவாக விளைதலும்; அவற்றைக் கிளி கொய்து போகாதபடி ஓப்பிப் பாதுகாக்கும் பெரிய மலை நாடனுடைய; பிறப்பு மிக உயர்வுடையதேயன்றி நம்மோடு ஒத்த ஒரு தன்மையதன்றென்பதை அறிந்தனம்; அதனால் அப் பிறப்பு இனி என்றும் வாழ்வதாக! அத்தகைய உயர்பிறப்பினனாதலின் அவன் கூறியது பிறழான்காண்; முதன் மழை பெய்தவுடன் வருவேன் என்றனன் ஆதலின், இனி எள்ளைப் பிழிந்தெடுக்கும் நெய்யையும் வெளிய கிழியையும் விரும்பிப் பெறாது; சந்தனமரம் மிகுதியாகவுடைய உயர்ந்த பெரிய மலைச்சாரலிலே குறுக்கிட்ட மலையின் புறத்திருக்கும் பக்கமலையிடத்து; நன்கலம் பெற்ற விறலி கூத்தயரா நிற்கும் இவ் வூரிலுள்ள நம்முடைய தினைப் புனத்தில்; அந்த மேகம் சிறிய பலவாய மின்னல் முதலாய தொகுதிகளையுடையதாகி வலமாக எழுந்து பெரும் பெயலை ஒருநாள் பொழிந்து விடுவதாக; பெய்த அன்றே வருகுவனாதலின் நீ வருந்தாதே கொள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *