வரையா நயவினர் நிரையம் பேணார்,
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி தோழி! உதுக் காண்:
இரு விசும்பு அதிர மின்னி,
கருவி மா மழை கடல் முகந்தனவே!
பாடியவர் : மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
திணை : பாலை
பொருள்:
நம் தலைவர் அளவில்லாத நன்மை செய்பவர். உன்னைத் தனியே தவிக்க வைக்கும் தகாத செயலை விரும்பாதவர். அவர் சென்றிருக்கும் வழியில் வன்கண் ஆடவர் இரக்கம் இல்லாமல் வழிப்போக்கர்களைக் கொன்று வழியில் போட்டுவிட்டுச் செல்வர். அந்த உடல் முடைநாற்றம் வீசும். முட்டையிட்டதும் இரை தேடி வந்திருக்கும் வயது முதிர்ந்த கழுகு அதனை உண்ணப் பறக்கும். அதன் சிறகிலிருந்து தூவி உதிரும். அந்தத் தூவியைக் குறி தவறாமல் பாயும் அம்பு தொடுக்கும் வில்லில் அந்த வன்கண் ஆடவர் கட்டியிருப்பர். அவர்கள் மேலும் வெற்றி கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்துடன் வழியைப் பார்த்துக்கொண்டு பதுங்கியிருப்பர். அந்த வழியில் அவர் சென்றுள்ளார். எனினும் நம்மை (உன்னை) விட்டுவிட்டு அங்கே தங்கமாட்டார். அங்கே பார். வானம் இடி முழக்கத்துடன் மின்னுகிறது. அது கடலில் நீரை முகந்துகொண்டு வந்துள்ள மேகம். அது பொழியும்போது, அவர் சொன்னபடி வந்துவிடுவார். கவலை வேண்டாம் என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.