• Sat. May 4th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Apr 22, 2024

நற்றிணைப்பாடல் 364:

சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் வாழலென் வாழி – தோழி! – ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.

பாடியவர்: கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் திணை : முல்லை

பொருள்:

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! தலைவர் வருவேம் என்று சொல்லிப்போன பருவமோ வந்து நீங்குதலாயிற்று; பகற்பொழுதும் இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடொன்றி; நிரம்பிய இடி முழக்கத்தையுடைய மேகம் நீர் நிறையப் பெற்று இயங்காநிற்ப; வாடைக் காற்றுடனே பனிக்கு உண்டாகிய சின மெல்லாம் என்மீது வந்து தங்காநிற்ப; இவ்வாறாகிய நாள் சில கழிவன வாயினும்; முறையே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத குற்றந் தீர்ந்த மாரியுடனே; வல்லோசை பயின்றறியாத சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை; ஊரின்கண்ணே புகுந்து மிக ஒலியாநிற்கும்படி; பலவாய ஆனிரையை நமது தெருவிலே செலுத்திவந்த பிறதொழிலைக் கல்லாத ஆயருடைய; கொன்றைப் பழத்தால் செய்த இனிய புல்லாங் குழல்; இவ்விடனெங்கும் இனிதாக ஒலியாநிற்ப; பிரிந்தோரின் உயிர் உடனே உடலை விட்டு நீங்கும்படி விரைந்து வருகின்ற மாலைப் பொழுதானது; ஒருசேர வந்து கூடினால்; அப்பால் எந்த நாளும் நான் உயிர் வாழ்ந்திரேன் காண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *