• Thu. Apr 25th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 17, 2022

நற்றிணைப் பாடல் 18:

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி- தோழி!- மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.

பாடியவர் பொய்கையார்
திணை பாலை

பாடலின் பொருள்:

பொறையன் என்னும் சேர வேந்தன் மூவன் என்னும் பல்லைப் பிடுங்கிக் கொண்டுவந்து தன் தலைநகர் தொண்டிக் கோட்டையில் பதித்துக்கொண்ட வரலாற்றை இணைத்துக்கொண்டு இந்த அகப்பொருள் செய்தி வளர்கிறது. 
அவர் குன்றைத் தாண்டிப் பொருள் ஈட்டிவரச் சென்றுள்ளார். சினம் அடங்கிய யானையின் மதம் ஒழுகி கழுவப்பட்டிருக்கும் தந்தங்களில் ஒன்று மட்டும் தோன்றுவது போல வெண்ணித்துடன் அருவி ஒழுகும் குன்றம் அது. மூவன் பல்லைப் பிடுங்கிப் பொறையன் தன் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்ட பின்னர் அவனது போர்மறவர்கள், கடலலை ஓய்ந்தது போலக் கண் துயின்றனர்.     தோழி! அவரை நினைத்து அவரிடம் பல முறை சென்று வந்துகொண்டிருக்கும் என் நெஞ்ச உருத்தல் நீங்க, போருக்குப் பின்னர் மறவர் உறங்குவது போல உன்னோடு உறங்க அவர் விரைவில் திரும்பி வருவார். இவ்வாறு ஆறுதல் கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *