நற்றிணைப் பாடல் 17:
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,
‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு’ என,
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,
உரைத்தல் உய்ந்தனனே- தோழி!- சாரல்,
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.
பாடியவர் நொச்சிநியமங்கிழார்
திணை குறிஞ்சி
பொருள்:
தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள். தலைவனை நினைந்து கண்ணீர் வந்தது. தாய் அரவணைத்து ‘என்ன செய்தாய்’ என்று முத்தமிட்டாள். ‘அவன் மார்பு என்னை வருத்தியது’ என்று சொல்லத் துடித்ததை எப்படியோ தாயிடம் மறைத்துவிட்டேன் – என்றாள், அவள்.
அன்று மழை பொழிந்தது. நல்ல பெரிய மலை. கடலலை போல அருவி கொட்டிற்று. அந்த இருண்ட காட்டில்தான் என் எண்ணம் இருந்தது. (அங்கேதான் அவன் என்னை எடுத்துக்கொண்டான்) அவன் இப்போது வரவில்லையே என என் கண்களில் கண்ணீர் கொட்டியது. அழகிய கண் அழுதது.
பார்த்த தாய் ‘என்ன செய்தாய், முத்தம் தரட்டுமா’ என்று சொல்லிக்கொண்டே முத்தமிட்டாள்.
பெண்களுக்கு நாணம் உயிரைக் காட்டிலும் சிறந்தது என்று சொல்வார்கள். நாணத்தை மறந்துவிட்டு அவன் மார்பு என்னைத் தழுவியது இப்போது வலிக்கிறது என்று சொல்லிவிடுவேன் போல் இருந்தது. எப்படியோ தாயிடம் சொல்லாமல் சமாளித்துக்கொண்டேன். அவன் வானளாவிய மலைநாடன். அவனது மலைச்சாரலில் காந்தள் மலரில் தேன் உண்ணும் வண்டு யாழ்நரம்பில் வரும் பண்ணைப் போல ஊதும். (அவனும் நானும் அப்படித்தானே).