
துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே.
பாடியவர்: பரணர்
திணை: குறிஞ்சி
பாடலின் பின்னணி:
தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் தலைவியோடு கூடியிருந்த பொழுது “உனக்கு என் நெஞ்சில் எப்பொழுதும் இடமுண்டு. நீ இல்லாமல் நான் இல்லை’” என்று உறுதிமொழி கூறினான். தலைவன் அவ்வாறு உறுதிமொழி கூறியது தோழிக்குத் தெரியும். இப்படி உறுதிமொழி கூறியவன் தலைவியைவிட்டு இத்தனை நாட்கள் பிரிந்திருக்கிறானே என்று தோழி வருத்தப்படுகிறாள். ”என் தலைவன் கூறிய உறுதிமொழிதான் உன் வருத்தத்திற்குக் காரணமா? தலைவனின் பிரிவினால் வரும் துயரத்தை நானே பொறுத்துக்கொண்டிருக்கும் பொழுது, நீ இவ்வாறு வருந்துவது முறையன்று.” என்று தலைவி தோழிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, என்னுடைய காதலன், பாறையின் அருகில் உள்ள, மாணை என்னும் பெரிய கொடியானது, தூங்குகின்ற ஆண்யானையின்மேல் படரும் குன்றுகளை உடைய நாட்டிற்குத் தலைவன். அவன் என்னோடு கூடிய (எனது நல்ல தோளை அணைத்த) பொழுது, “உனக்கு எப்பொழுதும் என் நெஞ்சில் இடமுண்டு; நீ இல்லாவிட்டால் நான் இல்லை” என்று கூறிய உறுதிமொழிதான் உன்னிடம் காணப்படும் வருத்தத்திற்குக் காரணமோ?.
