• Mon. Mar 17th, 2025

குறுந்தொகைப் பாடல் 31

Byவிஷா

Feb 22, 2025

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.

பாடியவர்: ஆதிமந்தியார்

பாடலின் பின்னணி:
ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாமல் வருந்தியதால், தலைவி உடல் மெலிந்தாள். அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன. தலைவியைப் பார்க்க வந்த தோழி, தலைவியின் வருத்தத்திற்குக் காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள். தலைவி, “ என்னைப் பார். என் கையிலுள்ள வளையல்கள் நெகிழ்கின்றனவே என்று திகைக்கிறாயா? என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நான் என் தலைவனைப் பிருந்திருப்பதுதான். நான் ஒர் நாட்டியம் ஆடும் பெண் என்று உனக்குத் தெரியுமல்லவா? என்னைப் போலவே என் தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். சிலநட்களாக அவனைக் காணாததால், நான் அவனைப் பல இடங்களில் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை.” என்று கூறித் தன் காதலைத் தோழிக்குத் தெரிவிக்கிறாள்.
பாடலின் பொருள்:
மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய என் தலைவனை வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்கள், ஆண்கள் மகளிரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் அவனைக் காணவில்லை. நான் ஒரு நாட்டியம் ஆடும் பெண். சங்கை அறுத்துச் செய்யப்பட்டு, ஓளியுடன் என் கையில் விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான்.