• Mon. Mar 17th, 2025

குறுந்தொகைப் பாடல் 32

Byவிஷா

Feb 24, 2025

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்.

பாடலின் பின்னணி:
தலைவியைக் காண்பதற்காககத் தலைவன் வருகிறான். ஆனால் தலைவிக்குப் பதிலாகத் தோழி வந்திருக்கிறாள். ”தலைவி வரவில்லையா?” என்று தலைவன் கேட்கிறான். “தலைவி வரவில்லை. அவள் இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள்” என்று தோழி கூறுகிறாள். தலைவியைக் காணாததால் ஏமாற்றம் அடைந்த தலைவன், “என்னுடைய காதல் உண்மையானது. தலைவி என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நான் மடலேறுவேன். நான் மடலேறினால் அதனால் எங்கள் இருவருக்கும் பழி வரும். தலைவியைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊரில் உள்ளவர்கள் எங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதனால் எங்களுக்குப் பழி வரும்.” என்று கூறுகிறான். தான் கூறியதைத் தோழி தலைவியிடம் கூறினால், தலைவி மனம் மாறித் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்று தலைவன் எண்ணுவதாகத் தோன்றுகிறது.
பாடலின் பொருள்:
காலைப்பொழுது, பகல், செயலற்ற நிலைக்குக் காரணமாகிய மாலைப் பொழுது, ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்ற நள்ளிரவு, விடியற்காலம் ஆகிய நேரங்களில் அவ்வப்பொழுது மட்டும் காமம் தோன்றுமாயின், அத்தகைய காமம் பொய் (உண்மையானது அன்று). பிரிவு வரும்பொழுது, குதிரையென்று எண்ணிக்கொண்டு பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின்மேல் ஊர்ந்து நான் தெருவில் வந்தால் (மடலேறினால்), அது தலைவி எனக்கு அளித்த துயரத்தைப் பலர் அறியச் செய்ததாகும். அதனால் பழி வரும். அவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊர் மக்கள் எங்கள் பிரிவைப் பற்றிக் குறை கூறுவார்கள். அதனால் எங்களுக்குப் பழி வரும்.