• Sat. Mar 22nd, 2025

குறுந்தொகைப் பாடல் 30

Byவிஷா

Feb 21, 2025

கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்.

பாடலின் பின்னணி:
பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவினால் தலைவி வருத்தமடைந்தாலும், அவள் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறாள். ஒருநாள் தலைவனைக் கனவில் காண்கிறாள். கனவு உண்மையான நிகழ்ச்சிபோல் தோன்றியது. தலைவன் தன்னோடு படுக்கையில் இருப்பதாக நினைத்து அவனைத் தழுவ முயல்கிறாள். ஆனால், அவள் தழுவியது தன் படுக்கையத்தானே தவிர தலைவனை அன்று என்பதை உணர்ந்த தலைவி, தன் நிலையை நினைத்து வருந்துகிறாள். தன் கனவையும் தன் வருத்தத்தையும் தலைவி தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, நீ வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக! பொய் கூறுவதில் மிகவும் வல்லமை பெற்ற என் தலைவன், என் உடலை அணைத்துத் தழுவியதாக நான் இரவில் கனாக் கண்டேன். அந்தப் பொய்யான கனவு உண்மையாக நடந்த நிகழ்ச்சிபோல் தோன்றியது. அந்தக் கனவு எனக்கு மயக்கத்தை உண்டாக்கியது. உடனே, உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன். தலைவன் என்னோடு படுத்திருப்பாதாக நினைத்து அவனைத் தடவினேன். நன்றாக விழிதுப்பார்த்த பிறகு, நான் தொட்டுத் தடவியது என் படுக்கையைத்தானே ஒழிய தலைவனை அன்று என்று தெரிந்தது. வண்டுகள் வந்து விழுந்து வருத்திய குவளை மலரைப்போல் நான் மெலிந்து தனியள் ஆனேன். நான் இரங்கத் தக்கவள்.