மதுரை மாநகராட்சி 30வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரா.மோகனாவிற்கு ஆதரவாக வாக்குசேகரிப்பின் போது திருமாவளவன் பேசுகையில்,
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சிதறிபோய்விட்டது. ஆனால் திமுக கூட்டணி அப்படியே சிதறாமல் ஸ்டாலின் தலைமையில் நீடிக்கிறது, இந்த கூட்டணி சனாதான சக்திகளை விரட்டியடிக்க சேர்ந்துள்ளோம், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கட்சி தான் பாஜக என்றார். இந்தியாவில் இஸ்லாமியர்களாக இருப்பவர்களில் 80சதவிதம் பேர் பின்தங்கிய சமூகத்தில் இருந்தவர்கள் தான்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை என்பது சாதியை கூறி பிரிவை ஏற்படுத்துவது தான். சாதி சாதியாக பிரிந்தாலும் இந்துக்களாக பாஜகவிற்கு ஓட்டு போடு என்ற கொள்கை உடையவர்கள் எனவும், ஆர்.எஸ்.எஸ் , பாஜக என்றாவது அனைத்து சாதியினரும் இந்துக்கள் என கூறுவார்களா? இந்து சமூகத்தில் அனைத்து சாதியினருக்கு ஈம சடங்கு , திருமணம் நடைமுறை உள்ளிட்டவைகள் ஒரே மாதிரி இருக்கும் என கூறுவார்களா? எனவும் சாதி ரீதியாக பிரித்துவைத்துள்ள மதமான இந்து மதம் எப்படி மதமாக இருக்க முடியும். இந்து மத மசோதாவை தடுத்தது ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவர்களின் அரசியல் பிரிவான பாஜகவும், காந்தியை கொலை செய்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ், பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான். அப்படிப்பட்ட இயக்கமான அரசியல் பிரிவான பாஜகவின் தலித்துக்கள் இணைவது மிகப்பெரிய ஆபத்து.
மத்திய இணை அமைச்சர் முருகன் தான் அச்சப்படுவதாக கூறுகிறார். உண்மைதான் தலித்துகளுக்கு எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் தலித்துகளை ஆக்கிரமிப்பதை விடமாட்டேன், விநாயகர் சிலையை கொடுத்து தலித்துகளிடையே ஊடுருவபார்க்கிறார்கள், குடிசையை கொளுத்தினால் கேட்கமாட்டார்கள், கோவிலில் நுழைய விடமாட்டார்கள். ஆனால் இந்துவாக இருக்க வேண்டும் என கூறி அரசியல் செய்வார்கள், இந்துவாக பிறந்த நான் இந்துவாக சாகமாட்டேன் என அம்பேத்கர் கூறியது ஏன் என மோடியோ, அமித்ஷாவோ முருகனோ பதில் சொல்வார்களா?
அதிமுக வெற்றிபெற்றால் அது பாஜக ஆட்சிதான் , அப்படி வந்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் பேசமாட்டார்கள் ஹெச்.ராஜா தான் பேட்டி கொடுப்பார், மதவெறி, சாதிவெறி கும்பல்கள் தலைவிரிந்து ஆடுவார்கள் என்றார். சனாதான சக்திகளை முறியடிக்க தான் திமுக கூட்டணியோடு உள்ளோம், இந்தியர்களை இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் எனவும், இந்துக்களை சாதி ரீதியாக பிரித்தால் தான் இந்துவாக இருக்கவைத்து வாக்குகளை பெற முடியும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். திட்டம், பாஜகவிற்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் வாக்கு தேவை இல்லை என்ற எண்ணம் உள்ளவர்கள் என்றார்.