
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.


சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா.சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .


நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் கலைஞர்களை இங்கு தான் சந்திக்க முடிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் கலைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தேன். அதில் கருணாஸ் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் நடக்கும்போது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப்பார்த்தது. கதை என்ன என்று முழுதாகத் தெரிந்திருந்தாலும் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.
சினிமா கம்பெனிகளில் நமக்குக் கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. சினிமா தொழில் தான் நல்ல தொழில்.. ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாய். 70 ரூபாய் செலவில் அந்தத் தயாரிப்பு உருவாகிறது என்ற கவலை அவருக்கு அருண் பாண்டியனுக்கு. ஏனென்றால் அவர் தயாரிப்பாளராகவும் இருந்தவர். நடிகர்கள் சம்பளம் வாங்குவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு படத் தயாரிப்பின் உங்களுடைய பங்கு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்களில் அண்மைக்காலமாக பிரமாண்டமாக செலவழித்து இரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாக்களை விட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறதுஇவ்வாறு அவர் பேசினார்.

