• Fri. Apr 26th, 2024

மதுரை எய்ம்ஸ் குறித்து ஜப்பான் பிரதமரிடம் தான் கேட்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்பி

மதுரைக்கு வருகைதரும் பிரதமர் மோடி, பொங்கல் பரிசாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது…
பிரதமர் மோடி மதுரைக்கு வருவதையொட்டி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று அவருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தேன். அதன்படி மத்திய அமைச்சர்களை அழைத்து பேசி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடிவெடுத்து, மதுரைக்கு வரும் பிரதமர் பொங்கல் பரிசாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்களுடன் மோடியின் பெயரை இணைத்து கொண்டாடுவார்களா? அப்படியிருக்கையில் தமிழர்கள் மட்டும் என்ன? ‘மோடி பொங்கல்’ என கொண்டாடுவதற்கு?


தை மாதத்தில் கொண்டாட வேண்டிய பொங்கலை மார்கழி மாதத்தில் கொண்டாடுவது போன்று காமெடி எதுவும் இல்லை. விளம்பரத்திற்காக இதை செய்கிறார்களா என்பது தெரியவில்லை. தைப்பொங்கலை மார்கழியில் நடத்திவிட்டு அதற்குப் பெயர் ‘மோடி பொங்கல்’ என்று கூறுவது மிக வருத்தமான செயல் என்றவரிடம்…
சிவகாசி வெடி விபத்து குறித்து?

பட்டாசு தொழில் பாதுகாப்பான தொழிலாக இருக்க வேண்டும். ஏழை தொழிலாளிகள் உயிரிழப்பது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை அதிகாரிகள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அதேபோல இந்த தொழில் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டும்.

மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வரும்?

இது குறித்து ஜப்பான் பிரதமரிடமும், ஜைக்கா நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும். அவர்களே தெளிவாக கூறி விட்டார்கள், 2026-ல் கட்டி முடிக்கப்படும் என்று. அதனால் நாம் 2026 வரை எய்ம்ஸுக்காக காத்திருக்க வேண்டியது நமது கடமை. எனவே ஜப்பான் பிரதமரையும், ஜைக்கா நிறுவனத்தையும் நம்புவோம்; மோடியையும், மோடி அரசையும் நம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.


அதேபோல் ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வு அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் எதிர்ப்புகளுக்கு இணங்க தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை வாபஸ் பெற வேண்டியது இந்த கவுன்சிலின் கடமையாக இருக்கும். இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்வார் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *