• Thu. Mar 28th, 2024

மிரட்டலுக்குப் பயந்து நான் பா.ஜ.க.வில் இணையவில்லை.., சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்..,

Byவிஷா

Dec 13, 2021

சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வில் இணைந்தது பல்வேறு சர்சைகளைக் கிளப்பி இருக்கிறது.
ஒரு கட்சியில் வழிகாட்டுதல் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்த மாணிக்கம் திடீரென பாஜகவுக்கு தாவியது அதிமுகவுக்க செயத துரோகம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் மிரட்டல் காரணமாகவே அவர் அக்கட்சியில் இணைந்ததாகவும் கருத்து பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு மாணிக்கம் அளித்துள்ள பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-


கடந்த 15 ஆண்டுகளாகவே அதிமுகவில் தான் இருந்தேன், அந்த காட்சியில் எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தேசிய அளவில் மிகப் பெரிய கட்சியான பாஜகவில் இணைய வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசையில் இருந்தேன். அக்கட்சியில் இணைவதற்கு முன்பாக அதிமுகவிலிருந்து விலகி தனிமைப் படுத்திக் கொள்கிறேன் என்று என்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிமுகவில் கொடுத்துவிட்டேன்.

அதன் பிறகுதான் நான் பாஜகவில் இணைந்தேன். எனவே நான் கட்சி தாவியதாக யாரும் கூற முடியாது. அதிமுகவை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க முயற்சி நடக்கிறது என சிலர் கூறுவது முற்றிலும் தவறானது.


அதிமுக தமிழகத்தில் இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் அதன் கூட்டணியில் பாஜக தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏதோ மிரட்டல் காரணமாக நான் பாஜகவில் அடைக்கலம் புகுந்ததாக செய்திகள் பரவுகிறது, அது கடைந்தெடுத்த பொய். நான் முறையாக ஜிஎஸ்டி வரியை செலுத்தவில்லை என்றும் அதன் பின்னணியில் எனக்கு பாஜக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்கிறார்கள், ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எம்எல்ஏ ஆவதற்கு முன்பாகவே ஒரு கட்டுமான நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தேன்.

அதை நான் என்னுடைய பிரமாண பத்திரத்தில்கூட தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். எம்எல்ஏ ஆவதற்கு முன்பு வரை எனது கம்பெனியின் விற்பனை 80 லிருந்து 90 கோடியாக இருந்து வந்தது. ஆனால் நான் எம்எல்ஏ ஆனபிறகு 10, 15 கோடியாக சுருங்கிவிட்டது இதுதான் உண்மை. எனது முழு விவரத்தையும் நான் அபிடவிட்டில் தெளிவாக தெரிவித்திருக்கிறேன்.

எனவே வருமான வரித் துறைக்கு அல்லது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எனவே பாஜக மிரட்டலுக்கு பயந்து நான் பாஜகவில் சேர்ந்து விட்டேன் என்று சொல்வது வடிகட்டிய பொய். என் விருப்பத்தின் பெயரிலேதான் நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *