• Fri. Apr 19th, 2024

உதயநிதி ஸ்டாலின் எனும் நான் …

ByA.Tamilselvan

Dec 13, 2022

முதலமைச்சர் மு.ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவர் என வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.இளைஞரணி தலைவர் இளைஞரணி தலைவராக பதவியேற்றதில் இருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக தான் செயலாளராக பதவி வகித்து வரும் இளைஞரணியில் ஆட்களை சேர்க்கும் பணியில் முழு மூச்சாக இறங்கி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை திமுகவில் இணைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
2021 தேர்தல் இளைஞரணிக்காகவும், கொரோனா காலத்தில் மக்கள் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவர்ந்த உதயநிதிக்கு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் சீட் கிடைத்தது. தான் போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் களத்தில் இறங்கி வீடு வீடாக அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தனது தொகுதியில் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தொகுதிவாரியாக சென்று திமுகவுக்காக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எய்ம்ஸ்மருத்துவமனை விவகாரத்தைல் கையில் எடுத்து ஒற்றை செங்கல்லோடு மத்திய பாஜக அரசையும் அதன் கூட்டணியாக அதிமுகவையும் விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் செங்கல் போன்று அவர் கையாண்ட நூதன யுக்திகளும் மக்களை அவர் பக்கம் ஈர்த்தன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதேபோன்று பல திரைப்படங்களிலும் அவர் நடித்து உள்ளார். தொடர்ந்து சினிமாக்களில் நடித்தும் வருகிறார்.அதோபோல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலம் மற்றும் தனது இயல்பான பேச்சாற்றலின் காரணமாக உதயநிதி ஸ்டாலின் மக்களை கவர்ந்தார்.
உதயநிதிஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்தே அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வந்தார். உதயநிதி மீது வாரிசு அரசியல் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில், ஸ்டாலின் பொறுமை காத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க சம்மதம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்து இருந்தார். இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்களும் தற்போது எழுந்துள்ளன. உள்ளாட்சித் துறை அல்லது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறையை வழங்க ஸ்டாலின் விரும்பியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *