• Sun. Dec 3rd, 2023

2030-க்குள் மனிதர்கள் நிலவில்
வாழலாம் – நாசா தகவல்

1969-ம் ஆண்டில் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஆர்டெமிஸ் என்கிற திட்டத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலம் சோதனை முயற்சியாக மனித மாதிரிகளுடன் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் கடந்த வாரம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது ஆர்டெமிஸ் திட்டத்தை நிறைவேற்றுவதில் நாசாவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.
இந்த நிலையில் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது குறித்து ஓரியன் விண்கல திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ பிரபல தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம். நாம் மக்களை நிலவுக்கு அனுப்பப் போகிறோம், அவர்கள் நிலவில் வாழ்ந்து ஆராய்ச்சி செய்ய போகிறார்கள். இது நாசாவுக்கு வரலாற்று நாள். அதுமட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளை விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த நாள். அதாவது, நாம் நிலவுக்கு திரும்பிச் செல்கிறோம். அதற்காகவே இந்த நிலையான (ஆர்டெமிஸ்) திட்டத்தை நோக்கி செயல்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *