• Sat. Apr 20th, 2024

நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள்? – குஜராத் ஐகோர்ட் கேள்வி

திடீரென அதிகாரத்தில் இருப்பவர் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களா? என் வீட்டிற்கு வெளியே நான் என்ன சாப்பிட வேண்டும் என்று நாளை நீங்கள் முடிவு செய்வீர்களா?” என்று நீதிபதி கூறியுள்ளார்.


ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்ய முடியுமா? மக்கள் விரும்பியதை சாப்பிட தடை செய்யமுடியுமா?” என்று வழக்கு ஒன்றில் குஜராத் ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.


நான் என்ன சாப்பிடுகிறேனோ, அதைதான் நீயும் சாப்பிடணும்.. நான் எப்படி வாழ்கிறேனோ, அப்படித்தான் நீயும் என்னை சார்ந்து வாழ வேண்டும்” என்பது போன்ற பிம்பங்கள் சமீப காலமாக வடமாநிலங்களில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.. இது நேரடியாக இல்லாமல், மறைமுகமான திணிப்பாகவே பார்க்கப்பட்டும் வருகிறது.


இப்போதும் குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் குஜராத்திலுள்ள வதோதரா, ராஜ்கோட், பவ்நகர், ஜூனாகாத் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தெருவோரமாக அசைவ உணவை வழங்கும் தள்ளு வண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.


பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளுக்குத்தான் இந்த தடை என்று அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகவே அந்த அசைவ விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது.. எனினும் இப்படி திடீரென அறிவிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழவே செய்தது.. இது சோஷியல் மீடியாவில் விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது..


எந்தவொரு உத்தியோகபூர்வ உத்தரவும் இன்றி விற்பனையாளர்களின் வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்களின் வழக்கறிஞர் ரோனித் ஜாய் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக அசைவ உணவு தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அரசியல் சாசனத்திலோ அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பிற சட்டத்திலோ முட்டை அல்லது அசைவ உணவுப் பொருட்களை விற்க தடை இல்லை.


அசைவ உணவு விற்பனை குழந்தைகளிடம் நெகட்டிவ் சிந்தனையை உண்டாக்கி, அதன்மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் பாஜக தலைவர்கள் கருத்து சொல்கிறார்கள்… அசைவ உணவுக்கு தடை விதிக்க காரணங்களையும் சொல்கிறார்கள்.


ஆனால், நடுநிலையாளர்கள் இந்த இரு கருத்துக்களையுமே மறுக்கிறார்கள்.. இந்துக்களின் மொத்த தொகையில் 15% பழங்குடியினத்தவரும், 7.5% பட்டியல் இனத்தவரும், 50% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் இங்கு வசிப்பதாகவும், இவர்களில் பெரும்பாலும் அசைவ உணவை சாப்பிடுபவர்கள் என்றும், அந்த அசைவ உணவிலிருந்து கிடைக்கும் புரோட்டீன் சத்து இவர்களின் உடல்நலத்துக்கு உதவுகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி ஒரு அறிவிப்பானது, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் சூழலில் இது சம்பந்தமான வழக்கு ஒன்று நடந்துள்ளது.


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தள்ளுவண்டிகளில் அசைவ உணவுகள் விற்பதற்கு தடை விதித்து அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை எதிர்த்து, குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது..


அந்த மனுவில், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளதோடு நிர்வாகத்தினர் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், கடைகளை அடித்து நொறுக்கி தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.


எந்த அதிகாரம் அல்லது அதிகாரத்தின் கீழ் மனுதாரர்கள் மற்றும் நபர்களை விற்பனை செய்வதிலிருந்து பிரதிவாதிகள் தடுக்கிறார்கள் என்பது பொது களத்தில் இல்லாத ஒன்று. இது ஒன்றும் மதவெறி என்று சொல்ல முடியாது,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பைரன் வைஷ்ணவ் முன்பு நடந்தது.. நகராட்சி ஆணையரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்..


அவரிடம், நீதிபதி பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.. முக்கியமாக, “உங்களுக்கு என்னதான் பிரச்சனை? உங்களுக்கு அசைவம் பிடிக்காது, அதுதானே? மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்த சாப்பாட்டைதான் சாப்பிட வேண்டும், அசைவ சாப்பாடுகளை சாப்பிடக்கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும்? நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?” என்று கேட்டார்..


அதுமட்டுமல்ல, “அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, இன்னைக்கு அசைவ உணவு சாப்பிட தடைபோடுபவர்கள், நாளை வெளியிலேயே சாப்பிட கூடாது என்று சொல்ல முடியுமா? அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கரும்பு ஜூஸ் விற்க தடை விதிக்க முடியுமா? உங்கள் மாநகராட்சி ஆணையரை இங்கேயே இருக்கச் சொல்லுங்கள்… இப்படிப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தடுக்க உங்களுக்கு எப்படித் துணிச்சல்?” என நீதிபதி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்.என்று கேள்விகளை எழுப்பினார்..


இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், விரைவில் இது தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… நிச்சயம் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வயிற்றில் பாலை வார்ப்பது போன்ற தீர்ப்பையே நீதிபதி தருவார் என்றும், சக மனிதனுக்கான அடிப்படை உரிமையை பெற்று தருவார் என்றும் நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *