• Thu. Mar 30th, 2023

45வது புத்தக கண்காட்சியை ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

Byகாயத்ரி

Dec 13, 2021

சென்னையில் 45வது புத்தக கண்காட்சி ஜனவரி 6 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, உணவு, விளையாட்டு, உடல்நலம் போன்ற பல புத்தகங்கள் இங்கு கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடைகின்றனர். அந்த வகையில் சென்னையில் 45வது புத்தக கண்காட்சி ஜனவரி 6 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து பபாசி நிர்வாகிகள் செய்தியாளர்களிடையே பேசுகையில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2022 புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும். ஜனவரி 6ம் தேதி மாலை 6 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கை ஏற்றி வைத்து புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவுள்ளார்.விழாவில் 2022ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் முதல்வர் வழங்கி கவுரவிக்க இருக்கிறார். இதேபோல் பபாசி வழங்கும் விருதுகளையும் முதல்வர் வழங்கவுள்ளார்.

புத்தக காட்சியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். வாசகர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 800 அரங்குகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *