கோவையில் அட்வான்ஸ் தொகையைக் கொடுக்காமல் வாடகை தாரரை ஏமாற்றிய வீட்டு உரிமையாளர் துடப்பத்தை காட்டி அடாவடி செய்தனர். ஆபாசப் பேச்சால் வாடகை குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர்.
கழிவுநீர் விவகாரத்தில் வந்த வினையால், சாவியைப் பிடுங்கிக் கொண்டு ரூ.45,000 ‘கழித்துக் கட்டி’ மோசடி செய்து உள்ளனர்.
தொழில் நகரமான கோவையில் வாடகைக்கு குடி இருப்பவர்களிடம்,
வீட்டு உரிமையாளர்கள் சிலர் அதிகக் கட்டணம் வசூலிப்பதோடு, அட்வான்ஸ் தொகையைத் தராமல் மோசடி செய்யும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், சிவானந்தா காலனி பகுதியில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் வாடகை தாரரைத் துடைப்பத்தால் தாக்க முயன்று, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து உள்ள சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சிவானந்தா காலனி, சுபாத்தாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த வைரம் என்ற பெண்ணிற்கு அப்பகுதியில் சொந்தமாக 5 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் கணவனை இழந்த சுபா, அவரது கல்லூரி படிக்கும் மகள், தாய் ராணி மற்றும் தம்பி ஞானசேகர் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த வீட்டில் கழிவறைத் தொட்டி நிறைந்து துர்நாற்றம் வீசிய விவகாரத்தில், பலமுறை முறையிட்டும் கழிவுநீரை அப்புறப்படுத்திய பின் தேங்கிய நீரை வாடகைதாரர்களே சுத்தம் செய்ய வேண்டும் என வைரம் வற்புறுத்தி உள்ளார். இது குறித்துக் கேள்வி எழுப்பிய ஞானசேகரை, வைரம் கையில் இருந்த துடைப்பத்தைக் காட்டி அடிக்கப் பாய்ந்ததோடு, அநாகரிகமான ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இந்த அராஜகத்தைத் தனது செல்போனில் ‘வீடியோ பதிவு செய்த ஞானசேகர், இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
கழிவுநீர் விவகாரத்தைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தக் குடும்பத்தினர் கடந்த 14-ஆம் தேதியே வீட்டை காலி செய்து உள்ளனர். அட்வான்ஸ் தொகையைத் தருவதாகக் கூறி நாட்களைக் கடத்தி வந்த வைரம், இன்று (ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை) தருவதாக வரவழைத்து உள்ளார். சுபா நேரில் சென்று அட்வான்ஸ் தொகையைக் கேட்ட போது, வீட்டின் சாவியை நைசாக வாங்கி வைத்துக் கொண்டு வைரம் தனது சுயரூபத்தைக் காட்டி உள்ளார்.
மொத்தம் வாங்கிய முன் தொகை (Advance): ₹60,000
2 மாத வாடகை பாக்கி: ₹21,000, ஜூன் மாதத்தில் இருந்த 15 நாட்களுக்கு: ₹5,250, வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் செலவு: ₹15,000,வீட்டின் பராமரிப்பு செலவு (Maintenance): ₹2,500
வைரம் கழித்துக் கொண்ட மொத்தத் தொகை: ₹43,750 (தோராயமாக ₹45,000)
தர ஒப்புக்கொண்ட மீதித் தொகை: ₹16,250 மட்டுமே,
இதேபோன்று அந்தப் பெண்மணி வாடகைதாரர்களிடம் மின்சாரம் மற்றும் குடிநீருக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதும், இதுவரை அங்கு குடி இருந்து காலி செய்த எவருக்குமே அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் அராஜகம் செய்து துரத்தி அடித்து உள்ளதும் அக்கம், பக்கத்தினரிடம் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
பிழைப்பு தேடி வரும் நடுத்தரக் குடும்பங்களை வாட்டி வதைக்கும் இந்த வீட்டு உரிமையாளர் மீது ரத்தினபுரி போலீஸார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



