• Wed. Apr 24th, 2024

ஒரு நாள் நான் முடிவு செய்தேன். இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…
ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.
துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.
அப்போது…


கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…


“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”
“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.


“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.


புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.
இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.


“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை. ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.


அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது. ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.
“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.


எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று சாந்தமாக பதிலளித்தார்.


மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய்,நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.
ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.
“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வௌ;வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.


இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”
நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”
“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.
“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.
“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.


“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான். “ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.
நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.


ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.
கடவுள் யாரையும் எப்போதும் கைவிடுவதில்லை
 முந்திக்கொண்ட முதல் செங்கல்
கோவிலின் அடித்தளத்தில்
நின்றுவிடும் !
 காத்திருந்த கடைசி செங்கல் தான்
கலசம் தொடும் !
 சாதிக்க பொறுமை மிக மிக அவசியம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *