• Mon. Jan 20th, 2025

நடுரோட்டில் திடீரென கவிழ்ந்த கேஸ் டேங்கர் லாரி… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

ByIyamadurai

Jan 3, 2025

டேங்கர் லாரி கவிழ்ந்து கேஸ் வெளியேறி வருவதால், கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலம் ரவுண்டானாவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்து கேஸ் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கேஸ் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

மேலும் டேங்கரை கிரேன் மூலம் தூக்கி நிறுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால் பாலத்திற்கான சந்திப்புகள் மூடப்பட்டன. மேலும் மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்த போலீசார், வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக டேங்கர் லாரி ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி
பனிப்பொழிவு காரணமாக கவிழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.