• Tue. Oct 8th, 2024

ஹலால் பிரச்சினை கிளப்பிய இந்துத்துவ கும்பல்… கண்டுகொள்ளாத மக்கள்..

ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளுக்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நேற்றைய தினம் இறைச்சிக் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது.

கர்நாடகாவில் முஸ்லீம் நடத்தும் இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹலால் இறைச்சிகளை இந்துக்கள் வாங்கக் கூடாது என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.

அதற்கு பதிலாக இந்து வியாபாரிகள் நடத்தும் இறைச்சிக் கடைகளில் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் ஹலால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹலால் உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்கள். தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகைக்கு மறுநாள் இந்துக்கள் இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று. இதனால் இந்துக்கள் ஹலால் இறைச்சியை வாங்குவார்களா அல்லது புறக்கணிப்பாளர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில்தான் யுகாதி பண்டிகை கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதன் பிறகு இறைச்சிகயை வாங்குவதற்காக அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதலேயே நீண்ட வரிசையில் இறைச்சி வாங்க காத்திருந்தனர். பெங்களூருவில் பேடராயனபுரா உள்பட 3 இடங்களில் இந்துக்கள் தற்காலிகமாக இறைச்சி கடை அமைத்து இருந்தனர்.
அங்கும் இறைச்சி விற்பனை ஜோராக இருந்தது. கடைகளுக்கு வர இயலாத வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் இறைச்சியை வாங்கினர். பெங்களூருவில் ஸ்ரீராம்புராவில் இறைச்சிக் கடையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 45 ஆண்டுகளாக இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் இறைச்சிகள் ஹலால் செய்யப்படுகிறதா, அல்லது மின்சார ஷாக்கில் துண்டிக்கப்படுகிறதா என்பது எங்களுக்கு தெரியாது. இந்த கடையில் இறைச்சிகள் நன்றாக இருக்கும். எங்களுக்கு ஹலால் செய்வதா கரன்ட் ஷாக்கா என்பெதெல்லாம் முக்கியம் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு தரமான இறைச்சியை கொடுக்க வேண்டும் என்றார். இந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், நேற்றைய தினம் 1000 கிலோ மட்டன் விற்று தீர்ந்தது என்றார். கடந்த சில மாதங்களாக ஹிஜாப் பிரச்சினை தலைதூக்கி வந்த நிலையில் தற்போது ஹலால் பிரச்சினை துளிர்க்க தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *