• Mon. Mar 17th, 2025

ஜாபர் சாதிக் ஜாமீன் வழக்கு – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ByP.Kavitha Kumar

Feb 13, 2025

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர்சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஜாமீன் கோரிய மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுக்கள் குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.