வீடியோ மூலம் யூடியூப்பில் பிரபலமான டாடி ஆறுமுகத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் உள்ளன. இவரது மகன் கோபிநாத், தமது சித்தப்பா மகன் ஜெயராம், நண்பர்கள் தாமு மற்றும் ஒருவர் உடன் தனியார் நட்சத்திர உணவக விடுதியில் மது அருந்தியுள்ளார்.

அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய அவர், மது அருந்தும் நேரம் முடிந்த பின்னரும் மது கேட்டதாகவும், அதற்கு ஜார்ஜ் சினாஸ் என்ற ஊழியர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஜார்ஜிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை பீர் பாட்டிலால் தாக்கி, மது அருந்தும் இடத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், சாலைக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாருக்கும், மது போதையில் இருந்தவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது, டாடி ஆறுமுகத்தின் மகன் கோபி மற்றும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராம் மற்றும் அவரது நண்பர் தாமு ஆகியோரை கைது செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.