

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (11.03.2025) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கூறப்படுகிறது.

மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்கள் கடல் பகுதிகளில் கால் நனைக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் எனவும், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு TN-Alert என்ற செயலியின் வழியாக மழையின் விபரங்களை தெரிந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

கன்னியாகுமரியில் மழை எச்சரிக்கை காரணமாக இன்று திருவள்ளுவர் சிலை பாறை,கண்ணாடிப் பாலம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றிற்கு படகு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

