


சிவகாசி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சக்கராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பெண் காவலர் ஒருவரின் மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்துடன் பேசியும், சில்மிஷம் செய்தும். ஆபாச சைகை காட்டுவதாகவும் தலைமை ஆசிரியர் சக்கராஜ் மீது புகார் எழுந்தது. குறிப்பாக பெண் காவலரின் மகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இப்புகார் தொடர்பாக தலைமை ஆசிரியர் சக்கராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், ஒரு வாரமாகியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவ்விஷயத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

