பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின்போது, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்கையில் பவுன்சர் பந்து ஒன்றை தோள் பட்டையில் வாங்கி வலியில் துடித்தார். இதனால் அவர் பாகிஸ்தான் இன்னிங்ஸில் பந்துவீச வரவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷான் பீல்டிங் செய்தார். இதனைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில், அடுத்த போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியா முழு உடல்தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதியில் எந்த சிக்கலும் இல்லை. அவர் ஏற்கனவே நன்றாக இருக்கிறார். முன்னெச்சரிக்கையாகவே ஸ்கேன் செய்யப்பட்டது’ என்று கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, ஹர்திக் பாண்டியா வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.