

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் செய்தது.
இதையடுத்து சல்மான் அலி ஆகா மற்றும் தையப் தாஹீர் ஜோடி சேர்ந்தனர். இதில் தையப் தாஹீர் 4 ரன்னிலும், சல்மான் அலி ஆகா 19 ரன்னிலும், ஷாகீன் ஷா அப்ரிடி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது
கேப்டன் ரோஹித் சர்மா 20 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து ஆடிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்தும், அக்சர் படேல் 3 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர். இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

