• Mon. Mar 17th, 2025

விராட் கோலி சாதனை மேல் சாதனை- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ByP.Kavitha Kumar

Feb 24, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 100 ரன்களைக் குவித்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

எட்டு நாட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது. ரோஹித் சர்மா 20 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து ஆடிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்தும், அக்சர் படேல் 3 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் 13 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி சாகின் அப்ரிடி வீசிய பந்தில் அபாரமாக பவுண்டரி அடித்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை வேகமாக கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸில் 14,000 ரன்களைக் கடந்த நிலையில் விராட் கோலி 257 இன்னிங்சில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

சாதனை மேல் சாதனை

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 8,000 ரன்கள், 9,000 ரன்கள், பத்தாயிரம் ரன்கள், 11 ஆயிரம் ரன்கள், 12 ஆயிரம் ரன்கள், 13.000 ரன்கள், 14 ஆயிரம் ரன்கள் என அனைத்து மைல்கல்லையும் அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் விராட் கோலி ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் 156 கேட்ச்களை பிடித்த நிலையில் விராட் கோலி தற்போது அதனை முறியடித்திருக்கிறார். உலக அளவில் முதல் இடத்தில் 218 கேட்ச்களுடன் ஜெயவர்த்தனே இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 360 கேட்ச்களுடன் ரிக்கி பாண்டிங் உள்ள நிலையில் தற்போது விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.