சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கோரவலசை கிராம். காளையார் கோவிலில் இருந்து மங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து, கோரவலசை கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையின் குறுக்கே மழை நீர் வரத்து கால்வாய் செல்கிறது.
மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது கோரவலசை கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வரும் நிலை ஏற்படும். ஓரிரு நாளில் மழை நின்றவுடன் நீர்வரத்தும் நின்றுவிடும் நிலையில், தற்போது பெய்துவரும் தொடர் மழையால் கால்வாயில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், கிராமத்திற்குச் செல்லும் தரைப்பாலத்தில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் நிலையில், இக்கிராமம் தனித்தீவாக மாறியதால், பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தத்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும், நேரில் சென்று பார்வையிடவோ, எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தகவலறிந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் (அதிமுக) கோரவலசை கிராமத்திற்கு நேரில் சென்று கால்வாயில் ஓடும் தண்ணீரில் இறங்கி ஆய்வும் மேற்கொண்டு கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான உயர்மட்ட பாலம் அமைத்து தர உறுதியளித்தார்.