• Mon. Nov 4th, 2024

நாசரேத் மர்காஷிஸ் பள்ளிக்கு “பசுமை பள்ளி” விருது

ByKalamegam Viswanathan

Oct 25, 2024

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளிக்கு “பசுமை பள்ளி” விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சுற்றுச்சூழல் கரிசன துறையின் சார்பில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் பசுமை விருதுகள் ஆண்டுதோறும் ஆலயங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு, மரம் நடுதல். சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுதல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணிகளை நடத்துதல் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விருதுகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. அதன் அடிப்படையில், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சிறந்த பசுமை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது, தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் 21வது ஸ்தோத்திரப் பண்டிகையின்போது நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மற்றும் உயர்,மேல்நிலைப்பள்ளிகள், சிறப்பு பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆகியோரால் வழங்கப்பட்டது. விருதினை, மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சுதாகர், தலைமையாசிரியர் குணசீலராஜ் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விருது வழங்கும் நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உபதலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் டேவிட்ராஜ், சுற்றுச்சூழல் கரிசனத்துறையின் செயலாளரும் இயக்குனருமாகிய திருமறையூர் சேகர குரு ஜாண் சாமுவேல் மற்றும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளின் நிர்வாகிகள், திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர குழு அங்கத்தினர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *