சிரிப்பு… வாழ்க்கையில் மனிதனுக்கு இறைவன் வழங்கிய வரம்… இந்த வரத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பவர்கள் நகைச்சுவை நடிகர்கள். தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நாயகர்களில் ஒருவரான நாகேஷிற்கு இன்று 89-வது பிறந்த நாள்.
ஒல்லியான உடல்…பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் பாடி லாங்குவேஜ், அபரிமிதமான நடிப்பு என்று இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நடிகர் நாகேஷ்.
ஈரோடு அருகிலுள்ள தாராபுரத்தை சொந்த ஊராக கொண்ட நாகேஷ் 1933-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இளம் வயதிலேயே நாகேஷை நாடகம் ஆட்கொண்டது. முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகள் நாகேஷின் முன்னேற்றத்திற்கு பாதகமாக இருந்தாலும், பாதகத்தையே படிக்கட்டுகளாக்கி விறுவிறுவென முன்னேறினார் நாகேஷ். பெரும் போராட்டங்களுக்கு பின் தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் மூலம் நகைச்சுவை நடிகர் ஆனார் நாகேஷ்.
அதைத் தொடர்ந்து வந்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் செல்லப்பா கதாபாத்திரம் மூலம் காமெடி நடிப்பிற்கென தனியொரு பாணியை அறிமுகப்படுத்தினார் நாகேஷ். குறிப்பாய், பாலையாவிடம் கதை சொல்லும் காட்சிகள் எல்லா காலகட்டத்திலும் ரசிக்கக் கூடியவை.
எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஒரு அனாதையாக நாகேஷ் நடித்த காட்சிகள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும். நாகேஷ் இல்லாத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு அந்தக் காலத்தில், கதாநாயர்களுக்கு இணையாக நாகேஷின் கதாப்பாத்திரமும் இடம்பெற்றிருக்கும். நாகேஷ{க்காகவே திரைப்படங்கள் ஓடிய காலம் அது.
காதலிக்க நேரமில்லை கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து வாய்ப்புகள் நாகேஷை நாடி வந்தன. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார் நாகேஷ். சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நாகேஷ் வெளிப்படுத்திய நடிப்பு, அழுத்தமான ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் அவருக்குப் பெற்றுத் தந்தது.
‘திருவிளையாடல்’ படத்தின் தருமி வேடத்தில் தோன்றி ரசிர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார் நாகேஷ். எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா. திருவிளையாடல் படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, நாகேஷின் நடிப்பு பிரமாதம்.
‘தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்.வயோதிகம் சூழ்ந்த போதும் தன் நடிப்பில் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் நாகேஷ். அதனால், ரஜினி கமல் என அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களிலும் சூப்பர் நடிகனாக வலம் வர முடிந்தது.
கமலின் ‘தசாவதாரம்’ திரைப்படம்தான், நாகேஷ{க்கு கடைசி திரைப்படம். இந்தப் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் கமலை அழைத்து “என் கடைசிப் படம் நல்ல படம், I am Honor – டா என கமலை உச்சி முகர்ந்திருக்கிறார். 30 ஆண்டுகள் காமெடியன், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என காலம் முழுக்க மக்களை மகிழ்ச்சிப்படுத்தி கொண்டேயிருந்த நாகேசுக்கு பெரிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லைதான். ஆனால், அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அவர், மனம் மகிழ்ந்த ரசிகனின் சிரிப்பே தனக்கான விருது என பலமுறை சொல்லியிருக்கிறார்.
2009ம் ஆண்டு ஜனவரி 31ந் தேதி நடிகர் நாகேஷ் மறைந்தார் அவர் மறைந்து இருந்தாலும் திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார். நாகேஷ் பிறந்த நாளான இன்று இவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர் :விஷா