தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய கணவர் சவுந்தரராஜனும் தொழில் முறை டாக்டர்கள். இவர்களின் வீடு சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழிசை சவுந்தரராஜன் சென்னை வீட்டுக்கு வந்திருக்கிறார். இன்று காலை, இருசக்கர வாகனத்தில் வந்த மூதாட்டி ஒருவர் ஆளுநர் வீட்டின் முன்பு திடீரென மயங்கி விழுந்து காயம் அடைந்தார்.
இதைக் கண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உடனடியாக அந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அதன் பின்னர் காயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ள வடபழனி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார்.மேலும், வடபழனி தனியார் மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். ஆளுநர் வீட்டின் முன்பு, இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.