• Thu. Apr 18th, 2024

அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம் என்று சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்தில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா குழு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை தலைவராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளனர். திஷா குழுவின் மாநில அளவிலான 2-வது ஆய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:- அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பொருளாதார குறியீடுகளை கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கைத்தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாக கொண்டதாக தீர்மானிக்கவேண்டும் என்பதே அரசின் எண்ணம். இந்த நோக்கத்தில் இம்மியளவும் மாறாமல் மேல் நோக்கிய பாய்ச்சலில் அரசின் எண்ணமானது நிறைவேறி வருகிறது. இதில் மிக முக்கியமானது கிராமப்புற வளர்ச்சி.
கிராமப்புற பிரச்சினைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், அதற்கு மேக்ரோ அளவிலான நன்மைகளை செய்து தரவேண்டும். அந்த வகையில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கோடு ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஊரக பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
2019-20-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதியினுடைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,471 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 3,043 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 428 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாக துறை அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல், 2021-22-ம் ஆண்டினை பொறுத்தவரைக்கும், 1,015 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 570 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதியை முறையாக பயன்படுத்தி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 27 லட்சத்து, 774 குழந்தைகள், 7 லட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது. ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கிராம மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய பிரதமரின் முன்னோடி கிராம திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களை சேர்ந்த 1,357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டமுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியமானதுதான். எந்த திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது நோக்கம். உங்களின் செயல்பாடுகள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உருவாக்கிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *