• Sat. Mar 22nd, 2025

சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை -அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி

ByPrabhu Sekar

Feb 27, 2025

சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி அளித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்தது மாநில அரசுதான். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகமான உதான் யாத்ரி கபே திட்டத்தை ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று சென்னை விமான நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த மலிவு விலை உணவகம் ஏற்கனவே இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் முதலில் தொடங்கப்பட்டது. இப்போது இரண்டாவதாக சென்னை விமான நிலையத்தில் இந்த மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் காபி, டீ ரூபாய் பத்து, தண்ணீர் பாட்டில் 10, சமோசா 20 ஸ்வீட் 20 என்று விற்பனை செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தை ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கேபினட் அமைச்சரான பிறகு நான் இங்கு வருவது இதுவே முதல் முறை. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்ததால், தமிழ்நாட்டை நான் சொந்த ஊராக உணர்கிறேன்.

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விமான சேவையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் உதான் விமான சேவை தொடங்கப்பட்டது. இப்போது இந்தியா முழுவதும் 619 வழித்தடங்களில் உதான் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதில் 1.57 கோடி மக்கள் பயணிக்கின்றனர்‌. இந்த மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகள் அளிக்க வேண்டியது நமது கடமை. அதனால் தான் இந்த உதான் யாத்திரி கஃபே தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் பல விமான நிலையங்களில் இதைத் தொடங்க இருக்கிறோம்.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நான்காவது பெரிய விமான நிலையமாக சென்னை விளங்குகிறது. சென்னை விமானநிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அப்பணிகள் ஃபேஸ் ஒன் பேஸ் 2 என்று இரு பணிகளாக நடந்து வருகின்றன அதில் பேஸ் ஒன் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. பேஸ் ,2 பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் 2.2 கோடி மக்கள் இப்போது பயணித்துக் கொண்டு இருக்கின்றனர். அது 3.5 கோடியாக அதிகரிக்க உள்ளது. அதற்கு தகுந்தார் போல் சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தும் பணி நடக்கிறது.

தமிழ்நாட்டில் கோவை விமானநிலையமும் அதிக அளவு பயன்படுத்தும் விமான நிலையமாக உள்ளது. அதை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

சென்னையைப் பொறுத்த மட்டில் இரண்டாவது விமான நிலையம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளான இடங்கள் தேர்வு செய்வது முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட பணிகளாக டெல்லியில் தனி ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் டெல்லியில் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்து முடிவு செய்தது மாநில அரசுதான். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

சென்னையில் தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை, சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்.

தமிழ்நாட்டில் உதான் திட்டத்தில் நெய்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து விமான சேவைகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன. இதில் சேலம், சென்னை இடையே ஏற்கனவே விமான சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக வேலூர், சென்னை இடையே விமான சேவைகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கின்றது. விரைவில் வேலூர், சென்னை இடையே உதான் திட்டத்தில் விமான சேவைகள் செயல்பாட்டிற்கு வரும். அதைப்போல் நெய்வேலியில் இருந்தும் விமான சேவைகள் தொடங்க இருக்கின்றன.

தொகுதி மறுவரையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நாடாளுமன்ற தொகுதிகள் தென் மாநிலங்களுக்கு நிதி ஆயோக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
எனது கருத்துக்கள் எனது கட்சி சார்ந்ததாக இருக்கும். தொகுதி மறுவரையரை சுமூகமான முறையில் செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்வதேச அளவில் ஏற்படும் விமான விபத்துக்களை இந்திய விமானத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் இந்தியாவில் இந்த விமான விபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விமான பயண டிக்கெட்டுகள் விலை ஏற்றம் தொடர்பாக பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் விலை தானாக குறையும். இவ்வாறு ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.