• Sun. Oct 6th, 2024

குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பினார் ஆளுநர் ரவி! முதல்வர் சட்டசபையில் தகவல்

ByA.Tamilselvan

May 4, 2022

ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர். என் .ரவிக்கு அனுப்பியது.ஆனால் அரசு அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் ஆளும் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்த முறை ஆளுநர் சட்டப்படி மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது. இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அரசுக்கும் – ஆளுநருக்குமான மோதல் மேலும் பெரிதானது. ஆளுநர் மயிலாடுதுறை சென்ற போது அவருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் மூலம் கருப்பு கொடியும் காட்டப்பட்டது. தற்போது மசோதாவை குடியரசுதலைவருக்கு அளுநர் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது..
இதுகுறித்து சட்டசபையில் ஸ்டாலின் கூறியதாவது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம்.
ஆளுநர் மசோதா இதுதொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமர் , மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இந்தச் சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.
தொடர் முயற்சிகளின் பயனாக, சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற தகவலை ஆளுநரின் செயலர் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *