• Fri. Apr 26th, 2024

பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்..

Byவிஷா

Feb 15, 2023

ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அரசியல் சார்ந்தோ, அரசு அமைப்புகளிலோ பதவியில் இருக்கக் கூடாது என்பது விதியாக இருப்பதால், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கடிதம் அளித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். தமிழ்நாட்டு பாஜக தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து கட்சியை வளர்த்த அவர், 1998, 1999 என இரண்டு முறை கோவை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய கயிறு வாரியத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், கேரள மாநில பாஜக பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு இன்று வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகும் கடிதத்தை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், “ஜார்க்கண்ட் ஆளுநராக வரும் 18ஆம் தேதி பொறுப்பு ஏற்கிறேன். 1974ல் துவங்கியது என்னுடைய பொது வாழ்வு. இல.கணேசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிரமமான காலத்திலும் பாஜகவில் பணியாற்றினோம். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளேன். இன்று மகத்தான இளைய தலைமுறையாக பாஜக உள்ளது.

அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியமான ஒன்று. பழங்குடியின மக்கள் அதிகம் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. தேவையான அத்தனை அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய பாடுபடுவேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *