



தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநில பூர்வீகத்தைக் கொண்டவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சியில் நடனமாடிய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி உரையாற்றினார். இதுதொடர்பாக ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின கொண்டாட்டங்களில் பேசிய ஆளுநர் ரவி, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மாநில தினக் கொண்டாட்டங்கள் போன்ற முன் முயற்சிகள், குறிப்பாக பன்முக இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒரு தசாப்த கால மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சியுடன் மக்களிடையே நெருக்கமான உறவுகளை உருவாக்கி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை எவ்வாறு வலுப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்தார்.
அத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநில பூர்வீகத்தைக் கொண்டவர்களிடம் கலந்துரையாடிய ஆளுநர், தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தினார். ஏனெனில் அது அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதுடன் தமிழின் வளமான பாரம்பரியம் மீதான அவர்களின் எண்ணத்தை ஆழப்படுத்தி மரபுகளுடன் அவர்களை இணைக்கும், தமிழ் மக்களுடனான பிற மாநிலத்தவர்களின் பிணைப்பை வலுப்படுத்தும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

