


நாகை அருகே வடக்காலத்தூரில் அரசு பள்ளிக்கு மேளம், தாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு, கிராம மக்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக நடைப்பெற்ற அரசுப் பள்ளி ஆண்டுவிழாவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் வடக்காலத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது. ஆண்டு விழா நடைப் பெறுவதையொட்டி கிராம மக்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள் உள்ளிட்டவைகளை மேளம், தாளம் முழங்க கல்யாண சீர்வரிசை போல் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து தங்கள் பிள்ளைகளின் கல்வி கண் திறந்து வைத்து வாழ்வில் ஒளியேற்றிய ஆசிரியர்களுக்கு மாலை அணவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் அறிவியல் கண்காட்சி, கலைத் திருவிழா மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண் கவர் கலை நி்கழ்ச்சிகள் நடைப்பெற்றது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் சினிமா பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு வண்ணமிகு ஆடைகள் உடுத்தி நடனமாடி அசத்தினர். பரதநாட்டியம், கோலாட்டம், முருகன் ஆட்டம் , குறவன் குறத்தி ஆட்டம் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது காண்போரை பரவசமாக்கியது. அரசு பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் அசத்தலான நடனங்களை பொது மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் சிவக்குமார், அன்பழகன், பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ரேவதி, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஜெயபாலன், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் ஏழுமலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து ஆசிரியர்களுக்கு மாலையிட்டு மரியாதை செயதுள்ள நிகழ்வு அனைவருக்கும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

