


நாகை அருகே வண்டலூர் அருள்மிகு சியாமளாதேவி சக்திவாழ் மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வண்டலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு சியாமளாதேவி சக்தி வாழ் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பங்குனி திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைப்பெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

அப்போது ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய அம்மன் பூக்குழிக்கு எதிரே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சக்தி கரகம் பூக்குழி இறங்க காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

