தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், வேதா நிலையத்தின் சாவிகளை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க தனி நீதிபதி சேசசாயி உத்தரவிட்டார். அதன்படி வேதா நிலையத்தின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை ஏற்று மேல்முறையீடு செய்யவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தனி நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவை ஏற்று வேதா நிலைய சாவிகள் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.