• Fri. Apr 26th, 2024

பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் கைது குறித்து விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்

Byமதி

Dec 20, 2021

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவருகின்றனர் அப்பகுதி மீனவர்கள். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு இன்று நோட்டீஸ் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *