• Tue. Feb 18th, 2025

தக்காளியை வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு..!

Byவிஷா

Nov 25, 2021

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் தக்காளி மற்றும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உச்சத்தை தொட்டிருக்கும் தக்காளி விலையை கட்டுப்படுத்த, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தக்காளியை கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.


தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் சில்லறை விலையில் 150 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையிலுள்ள பண்ணை பசுமை கடைகளில் 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை குறைக்கும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மழை இல்லாத மாநிலங்களில் இருந்து தாக்காளியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தக்காளி விலை ஓரிரு நாட்களில் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.