• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சமூக விரோதிகளின் கூடாரமாகும் கோத்தலூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கோத்தலூத்து கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கொடியவர்களின் கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் தெற்கு பகுதியிலும் ,கிழக்கு பகுதியிலும் இயற்கை சீற்றத்தின் காரணமாக தரைமட்டமானது. இதனையடுத்து பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும், அதைச் செப்பனிட்டு மீண்டும் சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து பள்ளி வளாகத்திற்குள் இடிபாடுகளுடன் உள்ள சுவர்கள் வழியாக , ஆடு மாடுகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் உள்ளே நுழைந்து தங்கள் இருப்பிடமாக மாற்றி வருகிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் உள்ளே நுழைந்து விடுகிறது. இதனால் பகலில் வரும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளும் இரவு நேரத்தை சாக்காக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளில் பள்ளி வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். குடிமகன்களும் உள்ளே நுழைந்து இரவு நேரங்களில் குடித்துவிட்டு பாட்டில் உள்ளிட்ட பொருள்களை வீசிச் செல்கின்றனர்.

இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டால் மிகப்பெரிய பிரச்சினை உருவாகும் என்று பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கல்வித் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி சுற்றுச் சுவரை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.