
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை காரணமாகச் சென்னை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதி கனமழை காரணமாகச் சென்னை மாநகரமே மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. இந்த பாதிப்பு எல்லாம் குறையத்தொடங்கி தற்போது தான் இயல்பு நிலைத் திரும்பியிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகக் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களான விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களில் மிதமான மழையும், காரைக்காலில் கனமழையும் பெய்யக்கூடும்.
புத்தாண்டு அன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரில் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது காலை 12 மணிக்கு தொடங்கிய மழை விடாது பெய்து வருகிறது இதனால் சாலை, தெருக்கள் எல்லாம் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
